நித்தம் நித்தம் நிகழ்வுகள்…
06.10.2024 👇🏻
பேரழகி நாவல் நேர்காணல்.
இன்றைய (6.10.2024) தமிழ் இந்து தமிழ்திசை நாளிதழில் பேரழகி நாவல் பற்றிய எனது நேர்காணல்.
0
சந்திப்பு: மண்குதிரை
கண்மணி குணசேகரன்- தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய ‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘நடுநாட்டுச் சொல்லகராதி’யைத் தொகுத்துள்ளார். இவரது சமீபத்திய ‘பேரழகி” நாவல் குறித்து உரையாடியதன் சுருக்கப்பட்ட பகுதி:
பேரழகி நாவலின் பின்னணி என்ன?
என்னுடைய நாவல்கள் பொதுவாக உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதியவைதான். ஆனால், இந்த நாவல் அதிலிருந்து வித்தியாசப்பட்டது. இந்த நாவலின் கரு மட்டும்தான் நிஜத்தில் நடந்தது. என்னுடைய திருமண வீடியோவைப் போட்டுப் பார்க்கும் போது, அதிலிருந்த ஒரு பெண்ணை எல்லாரும் நிறுத்தி நிறுத்திப் பார்த்தார்கள். என் மனைவி, “அந்தப் பெண்ணையே ஏன் பார்க் கிறாய்” எனக் கேட்டார். போட்டோகிராபரும் அந்தப் பெண்ணைத்தான் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்திருக்கிறார். இது ஒரு சம்பவம். எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு அண்ணன்-அண்ணி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மாநிறம். ஆனால், அவர்கள் மகள் புதுநிறம். நான் கிண்டலாக அவரிடம் கேட்டேன். “விடிஞ்சு எழுந்திருச்சு உம்மூஞ்சில முளிச்சா வேற எப்படி இருக்கும் ?” என அந்த அண்ணி கிண்டலாகப் பதில் சொன்னார். இந்த இரண்டையும் வைத்துத்தான் இந்த நாவலை எழுதினேன்.
அந்தப் பெண்ணின் அழகுதான் பிரச்சினைக்குக் காரணமா?
ஆமாம், அந்தப் பெண்ணுக்கு அவரது அழகுதான் பிரச்சினையாக இருக்கிறது. அந்த அழகுதான் எல்லோரையும் வசீகரிக்கிறது. அந்தப் பெண்ணின் அம்மா இந்த அழகை வைத்து அந்தப் பெண்ணை ஏதாவது நல்ல வேலையில் இருப்பவருக்குக் கட்டிக் கொடுத்து விடலாம் என நினைக்கிறார். ஆனால், அந்தப் பெண் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண ஆளைத்தான் விரும்புகிறாள்.
இந்தப் பெண்ணை உங்களது ‘அஞ்சலை’யுடன் தொடர்படுத்திப் பார்க் கலாமா?
(அஞ்சலை)அது ஒரு தனி உலகம். அஞ்சலை என்பது ஒரு தனியான வாழ்க்கை; மண்ணும் மக்களுமான ஒரு வாழ்க்கை. அந்த அளவுக்கு இதை யோசிச்சு எழுதவில்லை. இந்த நாவல் அஞ்சலையை விட மேம்பட்ட சூழல்.
மேம்பட்டது என்றால் ‘பேரழகி’யின் வாழ்க்கைச் சூழலா?
ஆமாம். கொஞ்சம் மேம்பட்டதுதான். சாப்பாடு கீப்பாடு பிரச்சினைகள் இல்லாத ஒரு வாழ்க்கைச் சூழல். உழைப்புக்கான பெரும் வெளி, பெரும் பாடுகள் எதுவும் இல்லாத கொஞ்சம் மேம்பட்ட சூழல்.பெண்கள் பக்கம் அவர்களது பலவீனங்களுடன் உங்கள் எழுத்து நிற்கிறது.. பொதுவாகக் கதைகளில், ‘வீறு கொண்டு எழு’ என்கிற பெண்கள் தீர்மானிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். விடிஞ்சி எழுந்தால் அந்தப் பெண்கள் முகத்தில்தான் முழிக்கிறேன். சாத்துகிறார்கள், அடிக்கிறார்கள் என்கிறார்கள்; லோல் படுகிறார்கள்… இப்படித்தான் இருக்கிறார்கள். வீறு கொண்டு எழுவது மாதிரியெல்லாம் இல்லை. என் சின்ன வயசிலேயே என் அம்மா இறந்து விட்டார். தெருவில் இருக்கும் பெண் சனங்கள்தான் என்னிடம் பாசமாக இருந்தது. அதனால், பெண்கள் பேரில் எனக்குப் ப்ரியம் உண்டு. எங்களுக்குக்கு கொஞ்சம் நிலம் இருக்கிறது. அங்கு களை வெட்டப் பெண் பிள்ளைகள்தான் வருவார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாடுகளைச் சொல்வார்கள். பெண் பிள்ளைகள் அரைப் பாவாடை கட்டும்போது ஒரு கனவு இருக் கும். முழுப் பாவாடை கட்டும்போது ஒரு கனவு இருக்கும். தாவணிப் பருவத்தில் மனமெங்கும் கனவு குதிரைகளாக இருக் கும். ஆனால், யதார்த்தம் அவர்களை வேறு எங்கோ கொண்டுபோய் விட்டுவிடும். வீட்டில் சொன்னவனைக் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றுப் பெரும்பாடு படுவார்கள். பெண் பிள்ளைகளின் நிலை சர சர என்று மாறிக்கொண்டு இருக்கும். பையன் களுக்கு அப்படி இல்லை. எனக்குப் பெண்களின் மீது ஒரு அக்கறை உண்டு. அதனால் பொம்பளை சனங்கள் இருந்தால் மத்தியில் போய் உட்கார்ந்து கொள்வேன்.எனக்குக் கூச்சமெல்லாம் கிடையாது. அவர்களுக்கு இடையில் கதை சொல்வதும் பாட்டு பாடுவதுமாக இருப்பேன்.
ஆனால், உங்கள் கதைகளின் பெண்கள், ஆணைச் சார்ந்திருக்கிறார்கள். இது முரணாக இருக்கிறது.
இயல்பில் அப்படித்தான் இருக்கிறது. நாம் கொஞ்சம் கூட்டி எழுதினாலும் அப்படியேதான் இருக்கிறது. ‘அஞ்சலை’யில் கொஞ்சம் எல்லாவற்றையும் மீறியதாகச் சொல்லியிருப்பேன். ஆனால், என்னதான் செய்தாலும் நீந்தி மேலேவரப் பார்த்தாலும் தொடர்ந்து அழுத்திவைக்கப் பட்டுதான் இருக்கிறார்கள். ஆண் அடிக்க வரும்போது திருப்பி அடிக்கவில்லை; தடுக்கிறாள் பெண். அதுவொரு எதிர்ப்புதான். ஆனால் அதற்காகக் கூடுதலாக அடி வாங்குகிறாள். ஆண்களால்தான் பெண் கட்டமைக்கப்பட்டிருக்கிறாள். நாம் வெளியில் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால், இயல்பு அப்படி இல்லை.
இந்த நாவலை அழகு பற்றிய விமர்சனமாகக் கொள்ளலாமா?
அழகு என்பது கூர்ந்து கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. அழகு என்பது எல்லாரும் பார்க்கக்கூடியதுதான். அம்மா இதை முதலீடாகப் பார்க்கிறார்; ஒருவன் அதைக் கொண்டுபோய்ச் சொந்தம் கொண்டாட நினைக்கிறான். அழகு என்பது நேசிக்கக்கூடியதாக, பொறாமைப்படக் கூடியதாகப் பல்வேறு பரிமாணத்தில் இருக்கிறது.
அதுதான் நாவலின் பொருள் எனக் கொள்ளலாமா?
இது ஒரு பெரிய தத்துவமெல்லாம் இல்லை. எழுத்தாளன் பெரிதாக இந்தச் சமூகத்தையெல்லாம் புரட்டிப்போட்டுவிட முடியாது. எழுத்தாளன் சும்மா சாதாரண ஆள். அவன் பத்தாவது படித்திருப்பான்; முந்திரிக்கொட்டை பொறுக்கிக் கொண்டிருப்பான். ‘அவன் பேனா முனையால் சமூகத்தை மாற்றிவிடுவான்’ அப்படியெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியெல்லாம் நினைத்து இந்த நாவலை எழுதவில்லை.
பொதுவாக எழுத என்ன திட்டம் வைத்துக்கொள்கிறீர்கள்?
இந்த நாவலைத் தவிர்த்து என் எல்லா நாவல்களும் சிறுகதைகளும் 90 சதவீதம் வாழ்க்கையை அப்படியேதான் எழுதியிருப்பேன். அது கற்பனையாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உண்மைச் சம்பவத்தைக் குறைத்திருப்பேன். கற்பனையாக எழுதலாம் என்று எழுதிப் பார்த்த நாவல் இது. இதுவும் தீர்மானமாக எழுதவில்லை. போற போக்கில் எழுதியது தான்.0தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
பேரழகி நாவல் தமிழினி பதிப்பகம் விலை: ₹460 தொடர்புக்கு: 8667255103
03.10.2024 👇🏻
இன்ஸ்டாவில் பேரழகி
Losliya Mariyanesan பிரபலமான ஈழத்துத் தமிழ் நடிகை. தனது Instagram பக்கத்தில் எனது பேரழகி நாவலோடு நேர்த்தியான காட்சியமைப்பில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். பேரழகி நாவலில் வரும் சந்திரவடிவுக்கு முகத்தில் அழகாக முடிசுருள் விழுவதை போன்று இந்த பெண்ணுக்கும் விழுவது சிறப்பு. எது எப்படியோ கடல் தாண்டிய நிலத்திலிலிருந்து எனது #பேரழகி நாவலோடு ஓர் அழகுப் பெண் கானொளி வருவது மகிழ்வு. Losliya Mariya பாப்பாவிற்கும் சிறப்பாக காட்சிமைப் படுத்திய ஒளிப்பதிவாளருக்கும் நன்றி. குறிப்பு: இன்ஸ்டாவில் பார்த்து முதலில் தகவலைச் சொன்ன Mahalakshmi Arun Prasad பாப்பாவுக்கு நன்றி
https://www.instagram.com/reel/DAdb6pjSP5K/?igsh=MzRlODBiNWFlZA==